22 ஜூலை, 2011

நாங்கள் யார்?


பாவாடை பறக்க 
பள்ளிக்கூடம் போனது போதுமென 
பத்தாம் வகுப்போடு பறிபோனது 
வாழ்வின் வசந்தம்.


தையல் எந்திர சக்கரமிடையே 
வாழ்க்கை டக்டக்கென நெண்டியடிக்குது 
சிறகு வெட்டிய கூண்டுக்கிளியாய் 
கம்பிகளுக்கிடையே 
கவிழ்ந்த வானம் பார்த்து 
காலம் நகருது 


இலைகளிடையே விழும் 
வெளிச்சப் புள்ளியாய் 
நைந்து போன சேலையோடும் 
கனவோடும் என் அம்மா 


என் இராஜகுமாரனைத் தேடி 
கனவுக்குதிரை ஏறி 
காற்றில் பறக்கும் 
என்னிலும் வேகமாய் 
வெயிலில் அலைந்த நாயாய் 
நீர் சொட்ட அலைந்து திரிகிறாள் அம்மா


வெள்ளி முளைத்த
பல இரவுகள் கடந்த 
என் தலையில் 
நிரந்தர வெள்ளி முளைக்குது 
கணவனால் கைவிடப்பட்டவள் 
கைம்பெண் என்றால் 
நாங்கள் யாரோ? 
நல்லோர் கூறும்.

- விவேகா


ஏப்ரல் 1997 செம்மலர் இதழில் வெளிவந்தது .