24 ஜூலை, 2011

மெளனமே...


நமக்குள்
பேச்சற்றுக் கழிகிற
இத்தருணங்களில்..

மெளனத்தின் பிடியிறுகி
தவிக்கிறது ஆன்மா

துக்கம் தழுவி அழுது புரள்கிறது
பொழுதின் நீட்சி

ஊதுவத்தி புகையென
கனவுவெளியிடையே
கமழ்கிறது உன் நினைவின் சுடர்

இறவின் அகண்டவெளியில்
உறக்கமற்று அலைகிறது
தனிமையின் அவலம்

விழியோரம் திரண்டு சொட்டுகிறது
பிரிவின் துயர்

உன் வைராக்கியத்தை உடைக்கிற திராணியற்ற
வெற்று புலம்பல்களாகி விட்டன்
என் கவிதைச் சொற்கள்

ஒரு மழைக்கு பிறகான புழுக்கமாய் கசகசக்கிறது
 உன் மெளனத்தின் அடர்த்தி

போதும் போதும் அலட்சிய பாவனைகள்

நம் நேசப்பெருவெளி மீது படர்ந்திருக்கும்
கிரகண இருட்டு தற்காலிகமானதே

சட்டையில் விழுந்த
பறவையின் எச்சமெனதுடைத்து விடு
என் மீதான கோபங்களை.

- விவேகா