10 ஆக., 2013

நீண்ட காலத்திற்குப் பின்பான ஒரு காதல் கவிதை




உன் மீதெங்கும் இருந்து
நட்சத்திரங்கள் உதிர்க்கும்
புன்னகையுடன் எதிர்வந்து நிற்கிறாய்
கண் கூசும் வெளிச்சம் மேவிட

உன் சுவாசம் தொட்டுணரும் தூரத்தில்
எவ்வளவு நேரம் சிலையாய் அமர்ந்திருப்பது
சூரியன் வெக்கை வீசும் குட்டையின் படுக்கையில்
வளரும் பாசியை ஒத்திருக்கிறது உன் குளுமை

என் உடல் முழுதும் மகிழ்ச்சிப் பூத்துக் கிடக்கும்
தோட்டமாகச் செழித்திருக்கிறது

நீ இல்லாத வேளைகளில்
உன் புன்னகையின் கொடி படர்ந்து
படர்ந்து வளரும்
தனிமை ஓங்கிய மலையாகிறேன்

ஈருடலும் ஒன்றையொன்று இழுத்துக் கொண்டு
விரைகிறது பால்வெளி எனும் என் கற்பனையில்

ஒரே ஒரு முத்தத்திற்கான தருணம்
பிறக்காமலே கூட போகலாம்
என்றாலும் என்ன
என் உடல் முழுதும் மகிழ்ச்சிப் பூத்துக் கிடக்கும்
தோட்டமாகச் செழித்திருக்கிறது

குட்டி ரேவதி