6 அக்., 2011

நான் இறந்திருக்கிறேன் - அகநாழிகை பொன்வாசுதேவன்



வானமும் மேகமும் ஒன்றையொன்று 
அணைத்தபடியிருந்த
மழைக்கால காலை அன்றுதான் 
நான் இறந்திருந்தேன்

உறக்கத்திலாழ்ந்திருப்பது போலிருப்பதாக
எல்லோரும் பேசிக் கொண்டார்கள்

இரவுக்குளம் போல 
சலனமற்றிருக்கிறதாம் என் முகம்

யாரையெல்லாம் அழ வைத்தேனோ
அவர்களெல்லாம் அழுது கொண்டிருந்தார்கள்

அழுதழுது ஈரம் வறண்ட சில கண்கள்
வருவோர் போவோரைப் பார்த்தபடியிருக்கின்றன

பதட்டமேதுமின்றி 
பேசிய பேசாத கணங்கள் குறித்து
நினைவுகளைக் கீறியபடி
நின்றிருந்தனர் நண்பர்கள்

விழி தேயப் பார்த்தும்
மொழி சிணுங்கக் கொஞ்சியும்
உடல் மலர பிணைந்தும் 
மையல் கொண்ட காதலிகள்
வந்திருந்தும் வராமலிருந்தும்
வருந்திக் கொண்டிருக்கிறார்கள்

எதிர்பார்த்தது என்றும்
எதிர்பாராதது என்றும்
திணறித்திணறி கள்ளமாய்க் கசிகிறது பேச்சு

அறைக்குள்ளிருந்து என் நினைவுகள் குறித்து
பற்றிய கொடி பறிக்கப்படுகிற வலியோடு
புழுங்கிக் கொண்டிருக்கின்றன புத்தகங்கள்

நான் ரசிக்காமலே
அதிர்ந்து கொண்டிருக்கிறது பறை

ஓய்ந்து கிடக்கிறேன் நான்.

பொன்.வாசுதேவன்