இந்த மழை இரவில்
எரியும் மெழுகுவர்த்திகளோடு
நானும் கரைந்து கொண்டிருக்கிறேன்
காற்றுக்கும் மழைக்கும் என்ன கசமுசாவோ
இரைந்து பேசுகின்றன
அப்படி என்ன சொல்லிவிட்டது இந்த காற்று
தலையசைத்து மறுக்கின்றன மரங்கள்
எப்போதோ ஒரு மழைக்கு
உன் குடை எடுத்துப் போன ஞாபகத்தில்
இப்போது நனைகிறேன்
என் மேனி தொட்டு போகும் ஈரக்காற்றில்
உன் மெல்லிய விரல் தீண்டும் உணர்வு
மழைநீர் இழுத்துப் போகிற
இந்த ஒற்றைச் செருப்பின் இணை
என்னைப் போல் எங்கே தனித்திருக்கிறதோ
உன் மின்னல் விழிகளின் வீச்சில் வீழ்ந்து கிடக்கிறேன்
துருவங்களுக்கப்பால் தூரதூரத்தில்
மழையில் நனையாமல் இந்த பறவைகளெல்லாம்
எங்கே போய்விட்டன
உன் நினைவில் நனைந்து நடுங்கிக் கொண்டிருக்கிறேன்
ஒதுங்க முடியாத ஓரிடத்தில்.
- விவேகா
- விவேகா