31 அக்., 2011

மழையாலணையும் பெயர்


அணிகையிலும் களைகையிலும்
வெவ்வேறழகு நீ.
மழை மாதிரி.

கொஞ்சிக்கொண்டே
இருக்கவேண்டும் என்கிறாய்.
தூறிக்கொண்டே இருக்கும் மழை.

அடைமழைக்கு
ஒளிவதுபோலத்தான்.
உன் கோபப் பொழிதல்களிலும்

சாத்தியமேயில்லை
என்று நினைக்கையிலெல்லாம்
உன்வருகை போன்றே மழை.

உன் என் ஊடல்
எப்படி அறிந்திருக்கும் மழை.
உன் மேல்தான் சந்தேகம்.

எடுத்ததற்கெல்லாம் சந்தேகிப்பாய்.
பருவகால மழையாய்.
ஊடல் கோடை மழை.


மழைகளில்
தேடிக்கொண்டே இருக்கிறேன்
முதல் மழையில் தொலைந்த என்னை.

மழைநீர் சேகரிப்பு தொட்டி
வீட்டிற்கு வெளியேயும்
மனசுக்குள்ளேயும்.

- ஆத்மார்த்தி ரவிசங்கர் 

நன்றி:ஆனந்த விகடன் (சொல்வனம்) 11.05.2011