நீ என்னை புறகணித்து
தூக்கியெறிந்த இடம்
இலந்தை முட்கள் அடர்ந்த
இடுகாட்டு பிணங்களின் புதைகுழி
மெளனத்தை கொல்கிற
ஆவேசத்தோடு மண்டையோடுகள் சிரிக்க
அழுகி நாற்றமடிக்கும் பிணக்கழிவில்
முட்கள் கிழித்து குறுதி கசியும்
என் உடம்பை துடைத்தபடி
வழுக்கி வழுக்கி வீழ்ந்து
செத்துக் கொண்டிருக்கிறேன்
செத்துக் கொண்டிருக்கிறேன்
ஒரு வேளை
உன் கூரிய நகங்களால்
என் இதயத்தை கிழித்து
துஷ்ட தேவதைகளுக்கு பழியிடு
ஒரு சுனியக்காரியைப் போல
அல்லது
உன் வலுவெல்லாம் திரட்டி
என் மண்டையோடு சிதற
என் கபாலத்தை உடைத்தெறி
மண்டையோடு சிதைந்த
என் பிணத்தின் மீது கால் வைத்து
மயானத்தில் ஒளிந்திருக்கிற
பேய்களும் பிசாசுகளும்
பயந்து நடுங்கியோட கூக்குரலிடு
இனி நேசத்தை சொல்கிறவர்களின்
நாக்குகள் அறுக்கப்படுமென.
நாக்குகள் அறுக்கப்படுமென.
-விவேகா